விபஸ்ஸனா தியானம் பற்றிய கேள்வி பதில்கள்

ஏன் இந்த முகாம் பத்து நாட்களுக்கு உள்ளது? 

உண்மையில், பத்து நாள் முகாம் என்பது குறைந்தபட்சமே; இது பயிற்சி முறைக்கு தேவைப்படும் அறிமுகமும் அடித்தளமும் அளிக்கிறது. பயிற்சியில் வளர்வது என்பது வாழ்நாள் வேலையாகும். பல தலைமுறைகளாக கிடைத்த அனுபவம் என்னவெனில், விபஸ்ஸனாவை பத்து நாட்களுக்கும் குறைந்த காலத்திற்கு கற்பிக்கப்பட்டால், மாணவர் பயிற்சிக்கு தேவையான அனுபவ புரிதலை அடைமாட்டார் என்பதே. பாரம்பரியமாக, விபஸ்ஸனா ஏழுவார கால முகாமாக கற்பிக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல், இந்த பாரம்பரியத்தின் ஆசிரியர்கள் தற்போதைய வேகமான வாழ்க்கை சூழலிற்கு ஏற்றார் போல் முகாம் கால அளவை குறைத்து சோதனை செய்தார்கள். அவர்கள், முப்பது நாட்கள், இரண்டு வாரங்கள், பத்து நாட்கள், ஏழு நாட்கள் என முயற்சித்தார்கள். ஆனால், பத்து நாட்களுக்கும் குறைந்த காலத்து முகாமகளில் மனம் அமைதி அடையவும், மன-உடல் நிகழ்வுகளுடன் ஆழமாக பயிற்சி செய்யவும் போதுமான அளவு நேரம் கிடைப்பதில்லை என்பதை உணர்ந்தார்கள். 

ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் நான் தியானம் செய்ய வேண்டியிருக்கும்? 

காலை 4 மணிக்கு விழித்தெழுதல் மணியுடன் நாள் துவங்கி, மாலை 9 மணி வரை தொடர்கிறது. நாள் முழுவதும் சுமார் பத்து மணி நேரங்களுக்கு தியான பயிற்சி இருக்கும். இடைவெளிகளும் ஓய்வு நேரங்களும் அவ்வப்பொழுது இருக்கும். ஒவ்வொரு நாள் மாலை சுமார் 7 மணி அளவில் திரு. கோயங்கா அவர்களின் பேருரை ஒலிபரப்பப்படும். அந்த நாளில் செய்த தியானத்தைப் பற்றி அது அமையும். பல தசாப்தங்களாக ஆயிரக்கணக்கான மக்களுக்கு பலனளிக்கக் கூடியவையாகவே இந்த கால அட்டவணையும் அமைந்துள்ளது. 

முகாம் எந்த மொழியில் நடைபெறும்? 

திரு. சத்ய நாராயண கோங்கா அவர்களின் ஒலிநாடா பதிவுகள் மூலம் பயிற்சி முறை கற்பிக்கப்படுகின்றன. இப்பதிவுகள் பெரும்பாலான உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.  முகாம் ஆசிரியருக்கு உள்ளூர் மொழி சரளமாக பேச முடியாத நிலை ஏற்பட்டால், உதவிக்காக மொழிபெயர்ப்பாளர்கள் இருப்பர்.  முகாமில் பங்கேற்க விரும்பும் ஒருவர்க்கு பெரும்பாலும் மொழி ஒரு தடையாக இருப்பதில்லை 

இந்த முகாமின் கட்டணம் எவ்வளவு? 

விபஸ்ஸனா முகாமில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் இந்த பரிசை முகாம் முடித்த பழைய மாணவர் அளிக்கிறார். போதனைக்கோ அல்லது இருப்பிடத்திற்கோ எந்தவித கட்டணமும் வாங்கப்படுவதில்லை. உலகெங்கும் நடக்கும் விபஸ்ஸனா முகாம்கள் நன்கொடையின் அடிப்படையில் தான் இயங்குகின்றன. முகாம் முடிவில், நீங்கள் பலனடைந்து உள்ளீர்கள் என்றால், அடுத்து வரும் முகாமிற்கு உங்கள் எண்ணத்திற்கும் வசதிக்கும் ஏற்ப நீங்கள் தானம் அளிக்கலாம். 

முகாம் நடத்த, எவ்வளவு ஊதியம் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படுகிறது ? 

ஆசிரியர்கள் எந்தவொரு ஊதியத்தையும், நன்கொடயையும், பொருள் பலனையும் பெறுவதில்லை. அவர்கள் தம்மை காப்பாற்றிக்கொள்ள வேறு தனிப்பட்ட வழிகள் இருத்தல் அவசியமாகும். இந்த விதிமுறையின் விளைவாக, அவர்களுக்கு போதனை செய்ய குறைந்த நேரமே கிடைக்கலாம். ஆனாலும், போதனை வணிகரீதியாக செல்லாமல் இருக்க, இது ஒரு காப்பாக அமையும். இந்த பாரம்பரியத்தில், ஆசிரியர்கள் விபஸ்ஸனா பயிற்சியை ஒரு சேவையாக கருதியே அளிக்கின்றனர். முகாம் முடிவடையும் போது, மக்கள் மகிழ்வுடன் இருப்பதை கண்டு கிடைக்கபெறும் மனநிறைவே அவர்களுக்கு கிடைக்கும் ஒன்றாகும். 

சம்மனம் போட்டுக்கொண்டு என்னால் உட்கார முடியாது. நான் தியானம் செய்ய முடியுமா? 

நிச்சயமாக. வயதினாலோ அல்லது உடல்நலக் குறைபாட்டினாலோ கீழே உட்கார முடியாதவர்களுக்கு நாற்காலி அளிக்கப்படும். 

நான் தனிப்பட்ட சிறப்பு உணவு எடுக்கின்றேன். என் சொந்த உணவை நான் எடுத்து வரலாமா? 

உங்களது மருத்துவர் ஏதேனும் சிறப்பு உணவை பரிந்துரை செய்திருந்தால், எங்களிடம் தெரிவியுங்கள். உங்களுக்கு அந்த உணவை அளிக்க முடியுமா என்று நாங்கள் பார்க்கின்றோம். உங்களது உணவு மிகவும் தனித்துவம் பெற்றிருந்தாலோ அல்லது தியானத்திற்கு இடையூறாக இருந்தாலோ, நீங்கள் இன்னும் சில காலம் காத்திருக்கத் தான் வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்வோம். மாணவர்கள் வெளியிலிருந்து உணவை எடுத்து வருவதைவிட இங்கு அளிக்கும் உணவையே உட்கொள்ள வேண்டும். மக்கள் பலரும் எங்களது எளிய சைவ உணவை நன்கு விரும்புகின்றனர். 

கர்ப்பிணிப் பெண்கள் முகாமில் பங்கேற்கலாமா? அவர்களுக்கென தனிப்பட்ட ஏற்பாடுகளோ அல்லது விளக்கங்களோ உள்ளனவா? 

கர்ப்பிணிப் பெண்கள் நிச்சயம பங்கேற்கலாம்; மேலும், பல கர்ப்பிணிப் பெண்கள் ஆழமாகவும் மௌனமாகவும் பயிற்சி செய்ய இந்த வாய்ப்பை பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு தேவைப்படும் கூடுதல் உணவையும் அளித்து, அவர்களை தளர்வாகவே பயிற்சி செய்ய சொல்கிறோம். 

முகாமில் மௌனமாக இருப்பது எதற்காக? 

முகாமில் பங்குபெறும் மாணவர்கள் அனைவரும் பூரன மௌனத்தை கடைபிடிப்பர் - அதாவது, உடல், சொல் மற்றும் மனதின் மௌனம். அவர்கள் மற்ற தியானிகளுடன் பூரன மௌனத்தையே காப்பார்கள். எனினும், பொருட் தேவைகள் ஏதேனும் இருப்பின் நிர்வாகத்துடனும், தியான சந்தேகங்கள் குறித்து ஆசிரியரிடமும் பேசலாம். முதல் ஒன்பது நாட்களுக்கு மௌனம் காக்கப்படும். பத்தாம் நாளன்று, மௌனம் நீங்கி, எல்லோரும் பேசிக்கொள்ளலாம். இந்த முகாமில் பயிற்சியின் தொடர்ச்சியே வெற்றியின் இரகசியமாகும். இந்த தொடர்ச்சியைப் பாதுகாக்க மௌனம் மிக இன்றியமையாததாகும். 

இந்த தியானம் செய்வதற்கு நான் தகுதியுடையவரா என்பதை எவ்வாறு தெரிந்துக் கொள்வது? 

போதிய உடல் மற்றும் மன நலம் கொண்ட ஒருவர், நேர்மையான ஆர்வமும், மும்முரமான முயற்சியும் செலுத்த தயாராக இருந்தால், இந்த தியானம் (பூரன மௌனம் உட்பட) கடினமல்ல. இங்களிக்கப் படும் விளக்கங்களைப் பொறுமையாகவும் மும்முரமாகவும் ஒருவர் பின்பற்றினால், அவருக்கு தெளிவான பலன்கள் நிச்சயம் கிட்டும். கடினமாக தென்பட்டாலும், ஒவ்வொரு நாளின் கால அட்டவணை, மிகக் கடுமையானது என்றோ மிகத் தளர்வானது என்றோ கூறலாகாது. மேலும், ஒரு அமைதியான சூழ்நிலையில், மும்முரமாக தொடர் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் மற்ற மாணவர்களின் இருத்தலும் ஒருவரது முயற்சிக்கு பெரும் உருதுணையாகவே அமைகிறது. 

முகாமில் பங்கேற்கக் கூடாது என்று எவரேனும் உள்ளனரா? 

கால அட்டவணையை பின்பற்ற முடியாத அளவிற்கு உடல் பலவீனம் கொண்ட ஒருவரால் முகாம் பலன்களை அனுபவிக்க இயலாது. மன நோய்களோ அல்லது மனப் புயல்களோ கொண்ட ஒருவருக்கும் அவ்வாறே. நீங்கள் இம்முகாமில் பயனடைவீர்களா என்பதை நாங்கள் கேள்வி பதில்கள் மூலம் உங்களுக்கு முடிவெடுக்க உதவுவோம். சில சமயங்களில், விண்ணப்பதாரர்கள் தங்களது மருத்துவர்களிடம் ஒப்புதலும் பெற வேண்டியுள்ளது. 

விபஸ்ஸனா உடல் மற்றும் மன நோய்களை தீர்க்குமா? 

நம்முள் தோன்றும் பதற்றமே பல நோய்களுக்கு காரணமாகும். பதற்றத்தை நீக்கினால்,  நோய் தாமே அகன்றுவிடும். ஆனால் நோய் தீரவேண்டும் என்ற எண்ணத்துடன் விபஸ்ஸனா கற்க வருவது ஒரு பெரிய தவறாகும். இவ்வாறு செய்ய முயற்சிப்போர் தங்களது நேரத்தைத் தான் வீணாக்குகின்றனர்; ஏனெனில் அவரகள் தவறான குறிக்கோள் மீது கவனம் செலுத்துகின்றனர். அவர்கள் தங்களுக்கே தீங்கு செய்துகொள்கின்றனர். அவர்கள் தியானத்தையும் சரிவர புரிந்துகொள்வதில்லை, நோயிலிருந்தும் விடுபடுவதில்லை. 

மனச் சோர்வை விபஸ்ஸனா குணப்படுத்துமா?

மீண்டும், விபஸ்ஸனாவின் நோக்கம்  நோய்களை குணமாக்குவதற்காக அல்ல. விபஸ்ஸனா பயிற்சி சரிவர செய்யும் ஒருவர் அனைத்து சூழ்நிலைகளிலும் எவ்வாறு மகிழ்ச்சியுடனும் உள்ளச் சமநிலையுடனும் இருப்பது என்பதை கற்கின்றார். ஆனால், கடும் மனச் சோர்வுடைய ஒருவர் இந்த பயிற்சியை சரிவர பயன்படுத்த முடியாததால், பலன்களும் கிடைக்காமலே போய்விடும். ஆகவே, அவ்வாறான ஒரு நபர் ஒரு மருத்துவ ஆலோசகரிடம் ஆலோசனை எடுத்துக்கொள்ள வேண்டும். விபஸ்ஸனா ஆசிரியர்கள் தியான வல்லுனர்களே தவிர மனநல மருத்துவர்கள் அல்ல. 

விபஸ்ஸனா பயிற்சி ஒருவரது மனச் சமநிலையை பாதிக்குமா? 

இல்லை. வாழ்வில் ஏற்றத் தாழ்வுகள் இருப்பினும், நீங்கள் கவனத்துடனும் உள்ளச் சமநிலையுடனும் இருக்கத் தான் விபஸ்ஸனா கற்பிக்கிறது. ஆனால், முகாமிற்கு வரும் ஒருவர் தமக்கிருக்கும் தீவிர மனப் புயல்களை மறைத்துக் கொண்டு வருவாரேயானால், அவர் இந்த பயிற்சியை புரிந்துகொள்ளவும் முடியாது, பலன்களை அனுபவிக்கவும் முடியாது. ஆகவே தான், முகாமில் நீங்கள் பலன் அடைவீர்களா என்பதை நாங்கள் கண்டறிய, உங்களது முந்தைய உடல் மற்றும் மன நலக் கோளாறுகளை எங்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். 

விபஸ்ஸனாவை பயில நான் ஒரு பௌத்தராக இருக்க வேண்டுமா? 

பல மதத்தினர்களும், மதச் சார்பற்றவர்களும் இத்தியான முறை தங்களுக்கு உதவியாகவும் பலனுடையதாகவும் இருக்கிறது என்று உணர்கின்றனர். விபஸ்ஸனா என்பது ஒரு வாழும் கலை, ஒரு வாழ்க்கை நெறியாகும். புத்தரின் போதனைச் சாரமாக இது இருப்பினும், இது ஒரு மதமல்ல. மாறாக, தமக்கும் மற்றவர்களுக்கும் நன்மைத் தரும் வாழ்க்கைக்கு இட்டுச் செல்லும் மனித பண்புகளின்  உருவாக்கமே இது. 

பத்து நாட்கள் முழுவதுமாக நான் ஏன் தங்க வேண்டும்? 

ஒவ்வொரு நாளும் படிப்படியாக விபஸ்ஸனா கற்றுத் தரப்படுகிறது. நீங்கள் குறித்த காலத்திற்கு முன் சென்றால், முழுப் பயிற்சி முறையும் கற்க மாட்டீர்கள். மேலும், மும்முரமாக ஒருவர் தியானம் செய்வதால், முகாம் முடியும் போது தான் அது நிறைவுக்கு வருகிறது. நிறைவுக்கு வரும் முன்னரே தியானப் பயிற்சிக்கு தடை ஏற்படுத்துவது உசிதமான ஓர் செயல் அல்ல. 

குறித்த காலத்திற்கு முன்னதாகவே செல்வது ஆபத்தானதா? 

நீங்கள் குறித்த காலத்திற்கு முன்பாகவே புறப்பட்டால், பயிற்சியை முழுவதுமாக கற்கும் வாய்ப்பை இழந்து, தினசரி வாழ்வில் வெற்றிகரமாக அதனை செலுத்த முடியாமலும் போய்விடுவீர்கள். தியான செயல்பாடு முழுமைப் பெற விடாமல் நடுவிலேயே தடை செய்துவிடுகிறீர்கள். ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வீட்டிற்கு முன்னதாக செல்வதற்காக, நீங்கள் இங்கு அளித்த உங்களது பொன்னான நேரத்தையே வீணடித்து விடுகிறீர்கள். 

பத்தாம் நாள், அனைவரும் பேசுவதற்கு அனுமதி கிடைக்கும் நிலையில், தீவிர தியானம் இருக்காதா? நான் அப்போது வீட்டிற்கு செல்லலாமா? 

அன்றாட வாழ்விற்கு திரும்பிச் செல்ல இந்த பத்தாவது நாள் மிக முக்கியமானதாகும். ஆகவே அந்நாளில் எவரும் வெளியே செல்ல அனுமதியில்லை.